மதுரை: சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை தவெக நிர்வாகியின் கண்கள் தானம் செய்யப்பட்டது அவரது உடலுக்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அஞ்சலி செலுத்தினார்.
மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் யூபிஎம். ஆனந்த் (30). தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணித் தலைவராக இருந்தார். நேற்று அவர் ஆரப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குப்பைத் தொட்டி அருகில் மோதி விபத்துக்குள்ளானது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைச் சிகிச்சை செய்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். இது பற்றி தகவல் அறிந்த தவெக தொண்டர்கள் மருத்துவமனை பகுதியில் திரண்டனர். தவெக தொண்டர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில், உயிரிழந்த தவெக நிர்வாகி ஆனந்தின் இரு கண்கள் தானம் செய்யப்பட்டது. இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், கண் தானம் மூலம் எங்களது மகன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பான் என, எதிர்பார்க்கிறோம் என, அவரது பெற்றோர் உருக்கமாக கூறினர்.
இந்நிலையில்,மதுரைக்கு வந்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மறைந்த நிர்வாகிக்கு அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணித் தலைவர் ஆனந்த் மறைவு தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆனந்த் விஜய்யின் ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் கண் தானம் செய்துள்ளார்” என்றார்..
» குமரியில் பருவமழை முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் மீட்புக் குழு!
» கன்னியாகுமரி கடலில் கண்ணாடி நடைபாதை பாலப்பணி டிசம்பருக்கு நிறைவு: அமைச்சர் தகவல்