மதுரை: மதுரை மாநகராட்சியில் ஒரே நேரத்தில் இரு துணை ஆணையர்கள் பணியிடமும் காலியாக உள்ளதால் மாநகராட்சி ஆணையாளரை பார்க்க, தினமும் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் உள்ளன. சென்னைக்கு அடுத்து இரண்டாவது மாநகராட்சியாக கடந்த 1971ம் ஆண்டு மதுரை மாகநராட்சி உதயமானது. ஆண்டிற்கு ரூ.586 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதில் சொத்து வரி மட்டுமே ரூ.243 கோடியாகும். கடந்த காலத்தில் மாநகராட்சிகளில், ஆணையாளருக்கு அடுத்த இடத்தில் ஒரு துணை ஆணையாளர் பணியிடம் மட்டுமே இருந்தது. அவர் மாநகராட்சி ஆணையாளருக்கு உதவியாக நிர்வாகம், சுகாதாரம், வருவாய் பணியிடங்களில் பணிபுரிவார்.
இவரது ஒப்புதல் பெற்றப்பிறகே ஆணையாளர் பார்வைக்கு, அனைத்து ஆவணங்களும் கொண்டு செல்லப்படும். இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநகராட்சிகளுக்கு இரு ஆணையாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் நிர்வாகம், வருவாய் ஆகிய இரு துறைகளை துணை ஆணையாளர்கள் சரவணன், தயாநிதி ஆகிய இரு துணை ஆணையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் தயாநிதி, கடந்த ஜூன் 30ம் தேதி ஒய்வு பெற்றார். சரவணன் ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு செங்கல்பட்டுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக சென்றுவிட்டார்.
தயாநிதி, மாநகராட்சி வருவாய்ப் பணியையும், மற்றொரு துணை ஆணையாளர் சரவணன், நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பணிகளை கவனித்து வந்தார். வருவாய்ப் பிரிவில் வரி வசூல் பணிகளை அன்றாடம் மேற்பார்வை செய்து, வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆணையாளர் பார்வைக்கு கொண்டு செல்வார். வரி வசூலில் ஏற்படும் சிரமங்களையும், சிக்கல்களையும் போக்கி, வருவாய் பிரிவு உதவி ஆணையர், வருவாய் ஆய்வாளர்கள், பில்-கலெக்டர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவார். நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பிரிவு டெண்டர், நிர்வாக இடமாற்றம், பணியாளர்கள் குறைபாடுகளை ஆய்வு செய்து ஆணையாளர் பார்வைக்கு கொண்டு செல்வார்.
» கடலூர் வரும் துணை முதல்வரை முற்றுகையிடுவோம்: மீனவர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு
» இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் - 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
மேலும், ஒய்வு பெற்று பணப்பலன் வராதவர்கள், தண்டனை காலத்தில் உள்ள பணியாளர்கள், பொதுமக்கள் போன்றவர்கள், துணை ஆணையாளர்களை பார்த்துவிட்டே, தேவைப்பட்டால் ஆணையாளரை பார்ப்பார்கள். ஆனால், தற்போது அனைத்து பார்வையாளர்களையும் ஆணையாளரே பார்க்க வேண்டிய உள்ளது. அதனால், ஆணையாளரை பார்க்க காத்திருக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைவரையுமே முகம் கோணாமல் பார்த்து அனுப்ப வேண்டிய கூடுதல் வேலைப் பழுவும் ஆணையாளருக்கு அதிகரித்துள்ளது.
துணை ஆணையாளர்கள் பார்த்து அனுப்பிய பிறகே ஆவணங்களை, ஆணையாளர் பார்ப்பார். தற்போது நேரடியாக ஆணையாளரே அனைத்து ஆவணங்களையும் பார்க்க வேண்டிய உள்ளது. அதனால், ஆணையாளருக்கு பணி சுமை அதிகரித்துள்ளது. ஒரு புறமும், சென்னை வீடியோ கான்பரன்ஸ், மறுபுறம் வார்டு ஆய்வு, மாநகராட்சி ஆய்வுக் கூட்டம் என்று ஒய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் ஆணையாளர். அதனால், அவரால் மாநகராட்சியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களில் கவனம் கொடுத்து பார்க்க முடியவில்லை.
ஆணையாளர் தினேஷ்குமார், துணை ஆணையாளர்கள் இல்லாத பாதிப்பை வெளியே தெரியாததுபோல், அவர்கள் பணிகளையும் சேர்த்து பார்க்கிறார். அதனால், துணை ஆணையாளர்கள் இல்லாததால் ஏற்படும் சிரமங்கள் வெளியே தெரியவில்லை. ஆணையாளரின் பணி சுமையை குறைக்க விரைவில் இரு துணை ஆணையாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என மாவட்ட மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.