நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடியில் இன்று (நவ.21) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உறுதியளித்தார்.

குறைதீர் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் 2024 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மனோ ரஞ்சிதம், பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி, திமுக விவசாய அணியை சேர்ந்த வி.பி.ஆர்.சுரேஷ் மற்றும் விவசாயிகள் ராதாகிருஷ்ணன், காமராசா, தமிழ் மணி, சுப்பையா, சந்திரசேகரன், டிக்சன், கணேசன் உள்ளிட்டோர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசினர்.

அதன் விபரம்: 2023- 2024ல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. அனைவருக்கும் முழுமையாக காப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோட்டாட்சியர் அளவில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வசதியாக இருக்கும்.

காட்டுப் பன்றிகள்: வாழை பயிருக்கு முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். காட்டுப் பன்றிகள் மற்றும் மான்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். தென்னை விவாயிகளை பாதுகாக்க நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். மேல செக்காரக்குடியில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கருங்குளம் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும். கீழ விளாத்திகுளம், அயன்வடமலாபுரம் பகுதியில் விவசாயிகளின் நிலங்களை கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதை தடுக்க வேண்டும். சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு: கோரம்பள்ளம் குளத்தின் 4, 5, 6, 8 மடை மதகுகளை சரி செய்ய வேண்டும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளம், ஆவுடையார்குளம் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கருமேணி ஆற்றில் சுப்ராயபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை உடைந்து சேதமடைந்திருப்பதை சரி செய்ய வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடை உடைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் முறையாக பதில் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் பதில்: இதற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அளித்த பதில் விபரம்- பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகள் மற்றும் பயிர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீடு தொகை வந்துவிடும். மாவட்டத்தில் உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. எந்த பகுதிக்கு தேவை என கண்டறிந்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோட்ட அளவில் கூட்டம்: கோட்டாட்சியர் அளவில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டங்களை நடத்தலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாழை பயிருக்கு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாழை விவசாயிகள் காப்பீடு செய்ய விரும்புவதில்லை. கடந்த ஆண்டு 60பேர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். வாழை விவசாயிகளும் அதிகமாக காப்பீடு செய்ய முன்வர வேண்டும்.

ஒழிக்க நடவடிக்கை: புதூர், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தங்கக்கூடிய 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள வேலி கருவை உள்ளிட்ட முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி பிடிப்போர் மூலம் அவைகளை பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் காணப்படுபவை காட்டுப் பன்றிகள் அல்ல, நாட்டு பன்றிகள் தான் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவைகளை விவசாயிகளும் பிடித்து அகற்றலாம். அதே நேரத்தில் மான்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில் நிலம்: நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் விவசாயிகள் பயன்படுத்தும் நிலங்கள் கோயில் பெயருக்கு மாற்றப் படுகின்றன. இது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளம், ஆவுடையார் குளம் கால்வாய்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும், ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அகற்றுவதற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடை, சுப்ராயபுரம் தடுப்பணை உடைப்புகள் சரி செய்யப்படும் என்றார் ஆட்சியர். இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE