புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து வரும் ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுத உள்ளேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ரெஸ்டோ பார் திறப்பு, லேப் டாப், மாட்டு தீவனம் வாங்கியது, சிவப்பு ரேஷன் அட்டை கொடுப்பது என அனைத்திலும் ஊழல், பொதுப்பணித் துறையில் ஒவ்வொரு டெண்டருக்கும் 30 சதவீத கமிஷன் என விஞ்ஞான ரீதியில் ஊழல் நடைபெற்றுள்ளது.
நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிப்பதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி ரூ.29 கோடிக்கு டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில், அதில் 46 பேருந்துகள் நிற்கும் இடம், 31 கடைகள், புக்கிங் சென்டர், கழிவறைகள் என சுமார் ரூ.15 கோடிக்கு மட்டுமே பணி நடைபெற்றுள்ளது. இதில் ரூ.14 கோடிக்கு மேல் இமாலய ஊழல் நடைபெற்றுள்ளது.
அதேபோல் குமரகுருபள்ளத்தில் ரூ.45.5 கோடியில் 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி புதிய தொழில் நுட்பத்தில் நடந்து வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் கட்டும் பணியில் செலவு தொகை குறையும். அதன் செலவு ரூ.30 கோடிக்கு மேல் போகாது. ஆனால் 45.5 கோடியில் கட்டப்படுகிறது. இதில் ரூ.15 கோடி அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும் முதல்வர் ரங்கசாமி ரூ.50 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
» கடலூர் வரும் துணை முதல்வரை முற்றுகையிடுவோம்: மீனவர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு
» இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் - 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம்
முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் லட்சுமி நாராயணனும் சைலெண்டாக லஞ்சம் வாங்குகின்றனர். மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த ஊழல்களை நிரூபித்தால் முதல்வர் ரங்கசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல தயாரா?. இந்த ஊழிலில் ஆட்சியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஆகவே ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்றார்
மேலும், “பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து ஊழலற்ற ஆட்சி கொடுப்போம். புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார். ஆனால் தற்போது புதுச்சேரியில் ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி மின்துறையை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும்போது அதனை நான் தடுத்து நிறுத்தினேன்.
ஆனால் மின்துறையை தனியாரிடம் தாரைவார்க்க, குறிப்பாக அதானியிடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மின்துறை தனியார் மயமாக்க விடமாட்டோம். மின்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்கட்டணம் உயர்த்துவதை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். புதுச்சேரியில் சென்டாக் மருத்துவ கலந்தாய்வில் என்ஆர்ஐ இட ஒதுக்கீட்டில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது.
இதில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்த 48 பேரை ரத்து செய்துள்ளனர். அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. போலி சான்று தயாரித்தவர்கள் குறித்து விசாரணையும் நடத்தப்படவில்லை. இதில் மருத்துவக் கல்லூரிகளும் உடந்தையாக இருக்கின்றன. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு போலி பத்திரம் மற்றும் சான்றிதழ்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் ஜான்குமார் எம்எல்ஏ பகிரங்கமாக ஜோஸ் சார்லஸ் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடுவார். நான் முதலியார்பேட்டை தொகுதியிலும், என் மகன் நெல்லித்தோப்பிலும் போட்டியிடுவோம் என்று பேசியுள்ளார். அவர் பாஜகவில் இருக்கிறாரா? இல்லையா? இன்றைக்கு பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் நிலை என்ன? அந்த கட்சியில் நீடிக்கின்றனரா?
ஆதரவு கொடுக்கின்றனரா என்பது தெரியவில்லை. எனவே இதில் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதா? என பாஜக தலைமை தெளிவுப் படுத்த வேண்டும். புதுச்சேரியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பாஜக. பண பலத்தை நம்பி வரும் பாஜகவினரை புதுச்சேரி மக்கள் தோற்கடிப்பார்கள்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.