இதையும் கவனிங்க ஆபீசர்: தனுஷ்கோடி புயலில் தப்பிய கட்டடங்கள் பாதுகாக்கப்படுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ராமேசுவரம்: தனுஷ்கோடி புயலில் தப்பிய நூற்றாண்டு சிறப்பு மிக்க கட்டங்களை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1914ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதனையோட்டி, ரயில் நிலையம், சுங்கத்துறை அலுவலகம், தபால் அலுவலகம், மருத்துவமனை மற்றும் ஆங்கிலேயர்கள் வழிபடுவதற்கு பவள பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு தேவாலயமும் கட்டப்பட்டது.

1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியில் தனுஷ்கோடியை தாக்கியப் புயலில், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள், சுங்க நிலையம், தபால் நிலையம், தேவாலயம், கோயில் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களும் இடிந்து சேதமடைந்து, அந்த கட்டங்களின் சிதிலங்கள் இன்றும் தனுஷ்கோடியில் உள்ளன. இதனை காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்காண சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வந்துச் செல்கின்றனர்.

தனுஷ்கோடி பகுதியில் வீசும் சூறைக்காற்று, மழை மற்றும் இயற்கை சீற்றங்களினால் இந்த பழமையான சிதிலமடைந்த கட்டங்கள் அடிக்கடி இடிந்து விழுந்து வருகின்றன. எனவே இந்த கட்டங்களின் பகுதிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனுஷ்கோடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE