திருப்பூர்: பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பாலுக்கான கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், வேளாண் விளைப் பொருட்களுக்கு விலை அறிவிப்பது போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கும் விலை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் ஆவின் அலுவலகம் முன்பு இன்று (நவ.21) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலை அறிவிக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் பால் சார்ந்த பொருட்களையும் வழங்கிட வேண்டும்.

ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி, விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE