சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்றே தொடங்கும்படி, தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேற்று திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா, திருச்சி சிவா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தகவல் தொடர்பு பிரிவு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என முன்மாதிரியான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றை கடந்த மூன்றரை ஆண்டுகளில் அடுத்தடுத்து நிறைவேற்றி வருவதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறது.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்திக்கு விழா எடுப்பது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை காலம் தாழ்த்துவது, வக்பு வாரிய திருத்தச் சட்டம், ஒரேநாடு ஒரேதேர்தல், ரயில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது, சமக்ர சிக் ஷா போன்ற திட்டங்களின்கீழ் மாநில அரசுக்கு நிதியை விடுவிக்காதது, மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, இளைஞர்களைத் திண்டாட வைக்கும் 9.2 சதவீதத்துக்கு மேலான வேலைவாய்ப்பின்மை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தாதது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற மத்திய பாஜக அரசின் அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பாஜக அரசு தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தி வருகிறது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மீனவர்கள் கைது, படகு பறிமுதல், தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசுக்கு இப்போதாவது மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் வரலாறுகாணாத வகையில் சீர்குலைந்து வருகிறது. மணிப்பூரை திரும்பிப் பார்க்க கூட பார்க்காமல் மத்திய பாஜக அரசு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவரை பிரதமர் மோடி ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாதது கண்டிக்கத்தக்கது. இனியும் வேடிக்கை பார்க்காமல், மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது 16-வது நிதிக்குழுவிடம் மாநில 50 சதவீதம் நிதிப்பகிர்வு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 சதவீத நிதியை மத்திய அரசு தரவேண்டும் என்ற கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழகத்தை கழக அரசு உருவாக்கி வருகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி மீண்டும் மலரும் என்பதில் ஐயமில்லை. எனவே, அரசின் சாதனைகள், திட்டங்கள் அனைத்தையும் கூறி, தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதலே தொடங்குங்கள் என தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.