உதகை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 27-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை ராஜ்பவன் வருகிறார்.
வரும் 28-ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசுகிறார். 29-ம் தேதி உதகை ராஜ்பவனில் ஓய்வெடுக்கும் அவர், 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
இதையொட்டி உதகை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளம் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீட்டுக்கல்லிலிருந்து உதகை ராஜ்பவன் வரும் சாலையை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. உதகை பூங்கா சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருவதுடன், ராஜ்பவனும் புதுப்பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா, எஸ்.பி. நிஷா தலைமையில் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.