கோவை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள, ஆரோக்கியசாமி சாலையில் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்தில், செயற்கை புல்வெளி தரத்துடன் கூடிய வகையில் ரூ.9 கோடியே 67 லட்சம் மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகளை மேற்கொள்ள தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை டிசம்பர் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள், ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ள இடம் ஆகியவற்றை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று (நவ.20) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ரூ.9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி விரைவில் இங்கு தொடங்கப்பட உள்ளன. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகம் அமையக்கூடிய வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை விளையாட்டுத்துறையில் செயல்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், குறிப்பாக கோவை மாநகராட்சியில் ரூ.935 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. அப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புதிய பணிகளும் தொடங்கப்பட்டு, அந்தப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த முறை கோவைக்கு வந்த போது, மாநகரில் சாலைகளை அமைக்க ரூ.200 கோடி சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். சாலைகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கப்பட உள்ளன. முன்னரே, தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைவில் முடிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு கடந்த முறை கோவை வந்த போது, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
» “திருமாவளவனின் கனவு விரைவில் நிறைவேறும்” - ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை
» குரூப் 1 பணிக்கு போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ்: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு மேலும் 2 மாதம் அவகாசம்
போர்க்கால அடிப்படையில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் சாலைகள் போடாததால் தற்போது சாலைகள் போட வலியுறுத்தி வருகின்றனர். அதை முதல்வர் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்” என தெரிவித்தார். முன்னதாக அங்குள்ள மாதிரிப் பள்ளிக்கான விடுதிக் கட்டிடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.