மதுரை: மதுரை மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் மணியரசுவின் மகள் திருமணவிழா தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அவர் மேடையில் பேசியதாவது: "ஆதிக்க மனப்பான்மை தூக்கி எறியப்படக் கூடிய அரசியலை தான் நாங்கள் உருவாக்குகிறோம். ஆணவப் படுகொலைக்கு எதிரான விழிப்புணர்வு கல்வி நிலையங்களில் இருந்து உருவாகவேண்டும். தலித் அரசியல் என்பது ஒரு சாதிய அரசியல் அல்ல. வலது சாரி, இடது சாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுக்கின்றனர். தலித் மக்கள் சிறுபான்மை. இவர்களுக்கு அதிகாரம் எதற்கு. இந்த அதிகாரம் ஊழல் செய்வதற்காக இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமமான சமநிலை உருவாக்க முடியவில்லை. 25 சதவீத மக்கள் இருக்கும் தலித் மக்களுக்கு எந்த அளவிற்கு பொருளாதார வலிமை உள்ளது. எந்த அளவிற்கு நிலங்கள் சொந்தமாக இருக்கின்றது என்ற கணக்கை அரசு வெளியிட வேண்டும். 10 லட்சத்திற்கு மேற்பட்ட பஞ்சமி நிலங்களுக்கான தரவுகளை வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். பிறப்பால் எல்லோரும் சமம் இல்லை என்கிறவர்களை கைது செய்து தனிமைப் படுத்த வேண்டும்.
அவர்களுக்கான விழிப்புணர்வுகளை உருவாக்க வேண்டும். மனநல மருத்துவர்களை கொண்டு ஒரு கவுன்சிலிங் சிஸ்டம் உருவாக்க வேண்டும். கோவிலுக்குள் பூட்டு போட்டு தலித் மக்களே வரக்கூடாது என்பது சட்டம் அல்ல. அவர்களுக்கான உரிமையை அரசு காவல்துறை மூலம் மீட்டெடுத்து கொடுக்கவேண்டும். இன்றைக்கும் 25% மக்கள் சேரிகளில் வசிக்கின்றனர். திருமாவளவனுடன் சிதம்பரம், விழுப்புரம் சுற்றுப் பயணத்தில் சேரிகளை பார்க்கும்போது, மனிதர்கள் வாழக்கூடிய இடமா? என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது.
» 2026 தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையுடன் வெற்றி - அர்ஜுன் சம்பத் கணிப்பு
» ரயில் கட்டணத்தை உயர்த்தவே வந்தே பாரத் ரயில்: வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு
சேரியில் பிறக்கக் கூடியவர்கள் 90% குடி நோயாளிகளாக உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பு, கல்வி முறை சாதிய கட்டமைப்பால் உருவாக்கப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் தங்களது உரிமை கேட்டால் தீவிரவாதிகள் என்கிறார்கள்.பிரச்சினைகளை திருப்புவதைவிட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். சேரிகளுக்கு என தனியாக பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு வேண்டும்.
நமது இயக்கம் உணர்வுப்பூர்வமானது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தன் உரிமையை கேட்கும் போது அதற்கான விமர்சனங்களும், பிரச்சினைகளும் எழும் என்பது எனக்கு எப்போதே தெரியும். இப்போது பலர் தொலைக்காட்சிகளில் எனது ஜாதி பெயரை சொல்லி பேசுகிறார்கள், எனக்கே என்னுடைய ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். கொள்கை , அதிகாரக் கூட்டணி என, சொல்வார்கள். அதிகாரத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். ஒருத்தர் மட்டும் ஆள பிறக்கவில்லை.
எங்களுக்கான அரசியல், பிரச்சாரத்தை உருவாக்க தெரியும். திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும். கையில் பேனாவுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். நான் புதிதாக வந்திருந்தாலும் தோழர்களுடைய ஆதரவோடு இயக்கத்தை வலிமையானதாக எப்போதும் திருமாவளின் பாதையில் பயணம் செய்வோம்" என்று ஆதவ் அர்ஜூனா கூறினார்.