கோவை: செல்போன் மூலம் பம்ப்செட்களை இயக்கும் கருவி வாங்கும் விவசாயிகளுக்கு மானியம்

By இல.ராஜகோபால்

கோவை: கைப்பேசி மூலம் பம்ப்செட்களை இயக்க உதவும் கருவிகளை வாங்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கைப்பேசி மூலம் பம்பு செட்டுகளை இயக்கும் கருவி, வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. இரவு மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க நேரில் செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தபடியே இயக்கும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பம்புசெட்டுகளை தொலைவில் இருந்தே கைப்பேசி மூலம் இயக்கிடவும், நிறுத்திடவும் முடியும்.

இதற்காக ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் கோவை மற்றும் பொள்ளாச்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார உதவி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE