பூந்தமல்லி: திருவேற்காடு கோலடி ஏரி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தச்சு தொழிலாளி தற்கொலைக்கு நியாயம் கேட்டு 500-க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டம் 7 மணி நேரம் நீடித்தது. திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரி, ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கராக குறைந்துள்ளது. அவ்வாறு பரப்பளவு குறைந்துள்ள ஏரி பகுதியும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வந்தது.
இதைத் தொடர்ந்து கோலடி ஏரியை ஆக்கிரமித்துள்ள 1,263 வீடுகளை அகற்ற முடிவு செய்து நீர்வள ஆதாரத்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோலடி- செல்லியம்மன் நகரை சேர்ந்த தச்சு தொழிலாளியான சங்கர்(43), கடந்த 17-ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், வீடுகளை அகற்ற நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் ஒட்டியதால் தன் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக சங்கரின் மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சங்கர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும், கோலடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிடக் கோரியும் கோலடி, திருவேற்காடு-அம்பத்தூர் சாலையில் நேற்று 500-க்கும் மேற்பட்டோர் காலை 9 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
» போதைப் பொருள் விற்றதாக அயனாவரம் காவலர் கைது: பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமான் ஜமால், திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மாறாக, அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, ஆவடி கூடுதல் காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருநூறுக்கும் மேற்பட்ட போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில், கைதான நூற்றுக்கும் மேற்பட்டோர், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுகவின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர், சங்கரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.