அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கில் பழனிசாமி சாட்சியம்: விசாரணையை டிச.11-க்கு தள்ளிவைத்து உத்தரவு

By KU BUREAU

நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு புகார் கூறிய அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலைப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத் துறையிலும் புகார் அளித்திருந்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி தன்னைப்பற்றி பேசக் கூடாது என அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கவும் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, முன்னாள் முதல்வரான பழனிசாமி குறித்து பேசக்கூடாது என அறப்போர் இயக்கத்துக்கு ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அறப்போர் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், பழனிசாமி தொடர்ந்த சிவில் வழக்கை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது. அதன்படி அறப்போர் இயக்கத்துக்கு எதிராக பழனிசாமி தொடர்ந்த சிவில் வழக்கின் விசாரணைக்காக பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பாக நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை ஆஜராகினர். பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.11-க்கு தள்ளிவைத்து அன்றைய தினமும் பழனிசாமி ஆஜராக உத்தரவிட்டுள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE