“இந்தித் திணிப்பு கருவியாக எல்ஐசி இணையதளம்” - “எல்ஐசி இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது. இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எல்ஐசி இணையதளத்தில் இந்தி மயம் - தலைவர்கள் கண்டனம்: “இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்ஐசி-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
“இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்ஐசி-யின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசாக இருந்தாலும், எல்ஐசி-யாக இருந்தாலும் தாங்கள் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல என்ற அடிப்படையை உணர வேண்டும்“ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது” என்று வைகோ கூறியுள்ளார். “எல்ஐசி இணையதளத்தை இந்தி மயமாக்கியிருக்கும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி பேசாத மக்களின் உணர்வை புண்படுத்தும், மொழி உரிமையை காயப்படுத்தும் வேலைகளை உடனடியாக மத்தியய அரசு கைவிட வேண்டும்,” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்தி மயம்: எல்ஐசி விளக்கம்: சர்ச்சையின் எதிரொலியாக, எல்ஐசி தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளப் பதிவில், “எங்கள் நிறுவன இணையதளத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக மொழிப் பக்கம் மாறவில்லை. தற்போது, இந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டது. இப்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் உள்ளது. சிரமத்துக்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று விளக்கம் அளித்துள்ளது. அதேவேளையில், எல்ஐசி இணையதளப் பக்கம் டீஃபால்டாகவே இந்தி மொழி இருப்பதாக பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை: ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டார். இவர் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதால் திவ்யா மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதனை மறுத்துள்ள காவல் துறை, “திவ்யா குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார். அவர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் அதுபோல் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. போலீஸார் விசாரணையில் குடும்ப பிரச்சினை என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளோம்,” என்றனர்.
தமிழக மீனவர்கள் கோரிக்கை: பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட குஜராத் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பாக மீட்டது. இதேபோல், இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயற்கை மழை பொழிவுக்கு அனுமதி கோரும் டெல்லி அரசு: தலைநகர் டெல்லியில் செயற்கை மழைக்கு அனுமதி அளிக்குமாறு மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபல் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி காற்று மாசு தொடர்பாக அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் தலையிடுவது பிரதமர் மோடியின் பொறுப்பு என்று கூறினார். மேலும், வீட்டில் இருந்தே வேலை, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
நவ.24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 24-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ரூ.7000-ஐ கடந்த தங்கம் விலை: தங்கம் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்தது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்திருந்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,065-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கும் விற்பனையானது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21-ம் தேதி வாக்கில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நவம்பர் 15-ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா எச்சரிக்கை: அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளார். கடைசியாக கிடைத்த தகவலின்படி, அமெரிக்க வழங்கிய நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை தங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவியாதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஐந்தினை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒன்று சேதமடைந்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.