அதிமுக ஆட்சியில் ரூ.51 கோடியாக இருந்த பயிர்க்கடனை ரூ.400 கோடியாக உயர்த்தி வழங்கியது திமுக அரசு: அமைச்சர்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: “ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் ரூ.51 கோடியாக வழங்கப்பட்ட பயிர்க்கடன் திமுக ஆட்சியில் ரூ.400 கோடியாக அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஜினு வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன் திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது: ”கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய கூட்டுறவு சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தகுதியுள்ள அனைவருக்கும் வரும் தேர்தலுக்குள் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு பயிர்க்கடன் ரூ.400 கோடி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் 2513 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆவின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களை விட ஒரு லிட்டருக்கு ரூ.12 விலை குறைவாக பால் விநியோகிக்கிறது” என்று அமைச்சர் கூறினார்.

சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 1137 பேருக்கு ரூ.10.27 கோடி பல்வேறு கடன் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இவ்விழாவில் ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் ரகுபதி, ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ஒன்றியக் குழு தலைவர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE