இந்திக்கு மாற்றப்பட்ட எல்ஐசி இணையதள முகப்பு பக்கம்: நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கடிதம்

By KU BUREAU

சென்னை: எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தை இந்தியில் மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

கனிமொழி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்கள் துறையின் கீழ் உள்ள ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் அணுகல் மற்றும் பயனர் அனுபவத்தைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக எழுதுகிறேன்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்(LIC ) வலைத்தளத்தின் இயல்புமொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பயனாளர்கள் ஆங்கிலத்தை மொழியாக பயன்படுத்த மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தப் பலருக்கும் வலைத்தளம் தொடர்ந்து இந்தியிலேயே இயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மக்கள் காப்பீடு குறித்து அறியவும், பயன்படுத்தவும் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டின் பன்முகத்தன்மையை உணர்ந்து, அரசு நிறுவனங்கள் தங்களின் தளங்களையும், சேவைகளையும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மக்கள் பயன்படுத்தும் பல்வேறு மொழிகளிலும், பயனாளருக்கு உகந்த வகையில் இணையதள அணுகலை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, வலைதளத்தின் மொழி மாற்ற செயலிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். பயனாளர் உதவி அமைப்பை பல மொழிகளை பேசும் மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். எல்ஐசி நிறுவனம் உடனடியாக வலைதளத்தை மாற்றி அமைக்கவும், இதுபோன்ற சிக்கல் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கவும் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE