விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் உலகத் தரத்திலான நவீன இருதய பரிசோதனை மற்றும் நுரையீரல் உள்நோக்கி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.168.72 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதோடு, பல்வேறு நவீன சிகிச்சைக் கருவிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தினந்தோறும் இங்கு சுமார் 1,800-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும் 500-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கூடங்குளம் அனல் மின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் இதயத்தின் செயல்பாடுகள், அடைப்புகளை துள்ளியமாக கண்டறியும் (Treadmill Test) பரிசோதனைக் கருவி ரூ.19,86 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை கருவியின் மூலம் இருதய ரத்த குழாய் அடைப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
அதோடு, இருதய நோயாளிகளின் செயல்திறனையும், இருதய துடிப்பையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இப்பரிசோதனை மூலம் ஒவ்வொருவரும் தங்களது உடல் திறனை அறிந்துகொள்ள முடியும். இதேபோன்று, ரூ.15 லட்சம் மதிப்பில் நுரையீரல் உள்நோக்கி (Video Bronchoscope) இயந்திரமும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
» உதகை: கூட்டுறவு வார விழாவில் ரூ.3.44 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கல்
» மோசமான ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சியை பார்த்ததில்லை: நாராயணசாமி வேதனை
இக்கருவி மூலம் நுரையீரல் சார்ந்த நோய்களை கண்டறியவும், நாள்பட்ட சளி, ரத்தக் கசிவு போன்றவைகளை துள்ளியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இவ்விரு பரிசோதனை கருவிகளும் மாவட்டத்தில் முதன்முறையாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நவீன மருத்துவ பரிசோதனை கருவிகள் சிகிச்சைப் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் இன்று திறந்துவைத்து, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங், நிலைய மருத்துவ அலுவலர் கணேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, மருத்துவர்கள் அன்புவேல், ராஜேஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.