2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவிப்பு

By KU BUREAU

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பது தவறானது. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே குறிக்கோள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், திமுகவையும், பாஜகவையும் விமர்சனம் செய்தார். ஆனால், அதிமுகவை எந்த விமர்சனமும் செய்யவில்லை. நம்மை விமர்சனம் செய்யாத விஜய்யை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது இருந்தே 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, அதிமுகவுடன் கூட்டணி என்பது தவறானது என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கட்சி தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான முதன்மை சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புபடுத்தி வரும் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளை தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யான செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றி கொள்கை திருவிழாவில் கட்சி தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களை குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி முடிவு எடுக்கவில்லை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதிமுக- தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி என வரும் தகவல் தவறானது. விஜய் கட்சியுடன் கூட்டணி என அதிமுக எப்போது அறிவித்தது. கூட்டணியை இறுதி செய்ய இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவை பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE