திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை(26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார்(45) என்பவர், யானையின் உதவி பாகனாக இருந்தார்.

உதயகுமாரும், அவரது உறவினர் கன்னியாகுமரி மாவட்டம் பளுகலைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர் மகன் சிசுபாலன்(58) என்பவரும், நேற்று மாலை 3.10 மணியளவில் கோயில் வளாகத்தில் யானையின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த யானை தனது துதிக்கையால் சிசுபாலனை தாக்கியது.

இதைக்கண்ட உதயகுமார், யானையைக் கட்டுப்படுத்த முயன்றார். அவரையும் யானை தாக்கியது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த உதயகுமார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோயில் யானை 2 பேரை தாக்கி கொன்றுவிட்டதை அறிந்த பக்தர்கள் பீதியடைந்தனர். யானையின் தலைமைப் பாகன் ராதாகிருஷ்ணன் அங்கு வந்து, யானை மீது தண்ணீரை பீச்சியடித்து அதனை சாந்தப்படுத்தினார். தொடர்ந்து யானை வழக்கமாக கட்டி வைக்கப்படும் கம்பி வலை போடப்பட்ட அறைக்குள் கட்டி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், வனச்சரக அலுவலர் கவின், டிஎஸ்பி வசந்தராஜ் உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் ஆகியோர், யானையை பரிசோதனை செய்தனர்.

யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கோயில் வளாகத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE