வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளர்கள் அளித்த மனு மீது உரிய பதிலளிக்கும்படி பூங்கா நிர்வாகத்திற்கு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 192 பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் சட்டம் அனைத்தும் பொருந்தும் என்பதால், போனஸ் சட்டம் 1965ன் படி 20% போனஸை அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரி கடந்த அக்டோபர் 21ம் தேதி அறிஞர் அண்ணா பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் பூங்கா நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் நேரிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அறிஞர் அண்ணா பூங்கா தொழிலாளர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையரிடம் (சமரசம்)-1 தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2 கே-ன் கீழ் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நவ 4ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையரிடம் (சமரசம்)-1 போனஸ் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.
வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் இந்த பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவர்கள் புறக்கணித்தனர். இதனால் கூட்டம் நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ 18) ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையரிடம் (சமரசம்)-1 போனஸ் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. பூங்கா நிர்வாகம் சார்பில் உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு கலந்து கொண்டார்.
» ராமேஸ்வரம் பகுதியில் ரூ.52.60 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: அரசு தகவல்
» ஓசூர் அருகே குழாயில் 'ஆசிட்’ நிறத்தில் வந்த குடிநீரால் அதிர்ச்சி!
அப்போது, தொழிலாளர் துணை ஆணையர் தொழிலாளர்கள் அளித்த மனு மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். விரைவில் ஊழியர்களின் மனு மீது உரிய பதில் அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதனை அடுத்து மீண்டும் அடுத்த மாதம் டிச.6-ம் தேதி இந்த சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.