மதுரை: ராமேஸ்வரத்தில் ரூ.52.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: "ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயிலில் இருந்து அக்னி தீர்த்தம் செல்வதற்கான சாலை மற்றும் கோயிலை சுற்றியுள்ள சாலைகள் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவில் சேதமடைந்துள்ளது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தை மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
ஆனால் அக்னி தீர்த்தம் அருகே ராமேஸ்வரம் நகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்கிறது. இதனால் கடல் அசுத்தமாகி வருகிறது. இதை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ராமேஸ்வரம் நகராட்சி வழக்கறிஞர் கே.சரவணன் வாதிடுகையில், ராமேஸ்வரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பதற்காக அங்குள்ள நிலப் பகுதியில் ரூ.52 கோடியே 60 லட்சம் திட்டமதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
» கோவை: ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு
» குறிஞ்சிப்பாடி: அன்னதானம்பேட்டையில் சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
அங்கு மின் இணைப்பு பெறப்பட்ட பின்பு, சோதனை ஓட்டம் நடத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் 6 கிலோ மீட்டர் தூரத்தில் பாம்பன் பகுதியில் உள்ள 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மரங்கள், புற்கள் வளர்க்க பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அங்கு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தங்களது தரப்பு பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.