ஓசூர் அருகே குழாயில் 'ஆசிட்’ நிறத்தில் வந்த குடிநீரால் அதிர்ச்சி!

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் குடிநீர் குழாயிலில் இருந்து ஆசிட் நிறத்தில் வந்த குடிநீரால் பொதுக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இப்பகுதிகளில் உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து, ரசாயன கழிவுநீர் பாதுகாப்பின்றி அருகே உள்ள ஏரிகளில் மறைமுகமாக திறந்துவிடப்படுகிறது. அதேபோல், தொழிற்சாலை வளாகத்திற்குள் இருக்கும் பயன்படுத்தாத ஆழ்த்துளை கிணறுகளிலும் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவது மட்டும் அல்லாமல், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளிலும் நீரின் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட பேடரப்பள்ளி பாலாஜி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளில் கடந்த சில தினங்களாக ஆசிட் நிறத்தில் நீர் வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "பாலாஜி நகரை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகளை பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகள் மூலம் வெளியேற்றுகின்றனர். இதன் மூலம் சுற்றி உள்ள நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளதால், ஒரு சில குடியிருப்புகளில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளில் மட்டும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்த நிலையில் தற்போது அனைத்து குடியிருப்புகளில் உள்ள ஆழ்த்துளை கிணறுகளிலும் தண்ணீர் ஆசிட் போன்ற நிறத்தில் வருகிறது. இந்த தண்ணீரில் சமையல் செய்தால் சாதம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் தங்களுக்கு சரும நோய் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் பாதிக்கிறது" என்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தனர். தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்தார். நீர் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வருவதை பார்த்த அவர், அந்த நீரை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதன் பின்னர் மாநகராட்சி சார்பில் பாலாஜி நகரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE