கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சாலை அமைத்து தர வலியுறுத்தி பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்டது அன்னதானம் பேட்டை ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. அதில், ஒரு பகுதி மட்டும் சாலை அமைத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக உள்ள பகுதியில் செம்மண்ணை கொட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அப்பகுதியில் மிகவும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதியுடன் சென்று வருகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. மேலும் வடிகால் வசதி இல்லாததால், சாலையிலேயே கழிவுநீர் தேங்கி தொற்று நோய் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கின்றது.
» மக்களுக்கு நல்ல குடிநீர் தர ரூ.500 கோடி வரை செலவு செய்ய திட்டம்: முதல்வர் ரங்கசாமி தகவல்
» நவம்பர் 19-25 உலக மரபு வாரம்: தொண்டி இடையமடம் சமணப்பள்ளியை தொல்லியல் சின்னமாக்க கோரிக்கை!
இந்நிலையில் சாலை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் இப்பகுதி குடியிருப்புவாசிகள். இந்த நிலையில் இன்று (நவ.18) இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தில் தலைமையில் மழைநீர் தேங்கி நிற்கும் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஒன்றிய உறுப்பினர்கள் பூவை பாபு, மணிகண்டன், வாலிபர் சங்கம் ஒன்றிய உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.