புதுச்சேரி: மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க அரசு அக்கறை எடுத்து சுமார் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை அரசின் பொதுப்பணித் துறை சார்பில் சுதானா நகரில் ரூ.29 கோடி செலவில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, நீர் உந்து குழாய்கள், நீர் பங்கீட்டு குழாய்கள், மோட்டார் பம்பு செட்கள், 7 ஆயிரத்து 182 புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் குழாய் பாதிக்கப்பட்ட சாலைகள் செப்பனீட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று சுதானா நகரில் நடந்தது. இவ்விழாவுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்து, நீர் தேக்க தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, கல்வெட்டை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: "மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் எப்போது திறக்கப்போகிறோம் என நினைத்தோம். இப்போதுதான் முழுமையாக பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. புதுவை மக்களுக்கு நல்ல, தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். நமது பகுதி கடலுக்கு அருகில் உள்ளதால் நிலத்தடி நீடல் உப்பு நீர் கலந்துவிடுகிறது. இதனால் டிடிஎஸ் அதிகரிக்கிறது.
» நவம்பர் 19-25 உலக மரபு வாரம்: தொண்டி இடையமடம் சமணப்பள்ளியை தொல்லியல் சின்னமாக்க கோரிக்கை!
» பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
நல்ல குடிநீர் வழங்க பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம், ஆழ்குழாய் நீரை சுத்திகரித்து வழங்கும் திட்டம், ஏரி, குளங்களில் தேங்கும் மழைநீரை சுத்திகரித்து வழங்கும் திட்டம், ஆற்று நீரை சுத்திகரித்து வழங்கும் திட்டம் என நல்ல குடிநீர் மக்களுக்கு வழங்க அரசு அக்கறை எடுத்து வருகிறது. இதற்காக சுமார் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை குடிநீருக்காக செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
புதுவை மக்கள் அரிசி வேண்டும் என கேட்டனர். இதற்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ இலவச அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் கொடுத்தோம். அடுத்தகட்டமாக ரேஷன் கடைகள் மூலம் அடுத்த மாதம் முதல் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும். இதற்காக டெண்டர் விட உள்ளோம்" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.