அரியலூர் | கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By பெ.பாரதி

அரியலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். உடையார்பாளையம், செந்துறை. ஆண்டிமடத்தை மையமாக கொண்டு முந்திரி கொட்டை தொழிற்சாலை அமைக்க வேண்டும். முந்திரி பயிருக்கு காப்பீடு திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். உளுந்து, நெல், மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான காப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டும்.

செந்துறையில் முந்திரி பழச்சாறு தொழிற்சாலை, கடலை மண்டி, சுத்தமல்லி பகுதியில் கடலை மண்டி அமைக்க வேண்டும். கூட்டுறவு வேளாண் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட கோரி கடுமையாக வற்புறுத்துவதை கைவிடவேண்டும். யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிர்க்கடன் காலதாமதமின்றி வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திட்டத்தை பிரதமர் வாபஸ் பெற வேண்டும்.

இலவச விவசாய மின் இணைப்பு, தட்கல் விவசாய மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்கபட வேண்டும். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை ஆகிய துறைகளில் உள்ள விவசாயிகளுக்கான திட்டங்களை விவசாயிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று(நவ.18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சின்னப்பன், ஒன்றியத் தலைவர் ராமசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE