“சேலத்தில் இன்னும் ஒரு ஐ.டி. ரெய்டு நடந்தால் அதிமுகவை பாஜகவுடன் இபிஎஸ் இணைத்துவிடுவார்” - உதயநிதி

By KU BUREAU

சென்னை: சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் அதிமுகவை பாஜகவுடன் பழனிசாமி இணைத்து விடுவார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் விழாவில் 48 ஜோடிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருமணம் நடத்தி வைத்தார். அத்துடன் சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: சுயமரியாதை திருமண முறைக்கு ஒருகாலத்தில் சட்ட அங்கீகாரம் கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இப்போது இதுபோன்ற திருமணஙகள் ஏராளமாக நடக்கின்றன. இதுதான் தமிழகத்தில் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் பண்பாட்டுப் புரட்சி. தமிழர்களின் வாழ்வு உலகளவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்க கொள்கை.

இதன் அடிப்படையில்தான், நமது திராவிட மாடல் அரசின் முதல்வர் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.அந்தவகையில் மகளிருக்கு விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சிகள் இன்றைக்கு கலங்கிப் போய் இருக்கின்றன. மக்கள் இந்தத் திட்டங்களை கொண்டாடுகின்றனர்.

முதல்வரை வாழ்த்துகின்றனர். திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டாமல், வேறு யார் பேரை சூட்டுவது? கடந்த 3 மாதங்களுக்கு முன் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என பழனிசாமி கூறினார். சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஐ.டி. ரெய்டு நடந்தது. அடுத்த நாளே கூட்டணி குறித்து தேர்தல் நெருக்கத்தில் பேசலாம் என்றார். இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார்.

வரவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல உழைக்க வேண்டும். ஒவ்வொரு வீடாகவும் ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக 4 அல்லது 5 முறையாவது சந்தித்து நமது திட்டங்கள் குறித்து பேச வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு மற்றும் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE