கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி - ‘ஸ்டெர்லைட்’ தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு

By KU BUREAU

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மனுத்தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘மக்களின் கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி ’ என்று அதை குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து வந்ததால் ஆலயை மூட வலியுறுத்தி 1996 முதல் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

மதிமுகவும் உடன் சேர்ந்து சட்டரீதியாக போராடி வந்தது. பல சட்டப் போராட்டங்களுக்கு பிறகு 2019-ல் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

உயர் நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்ததை அடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் “ஒரு தொழில் துறையை மூடுவது முதல் தேர்வல்ல. ஆனால் தொடர்ச்சியான மீறல்கள் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்திருந்தாலும் அப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும், நலனும் முக்கியமானது” என்று தெரிவித்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

அந்தவகையில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்துக்கும், மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சட்டரீதியாக போராடியதற்கும் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE