சென்னை: தாழ்தள பேருந்துகளை இயக்குவதில் இருக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு, ஓட்டுநர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு ரூ.100 சிறப்பு படி வழங்க வேண்டும். தலா 2 நடத்துநர்களை நியமிக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் பி.கிருபாகரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. அதேநேரம், 12 மீட்டர் நீளம் கொண்ட இந்த பேருந்தை பணிமனையில் இருந்து வெளியே எடுத்து, மீண்டும் உள்ளே கொண்டு செல்வதும், குறுகலான சாலைகளில் இயக்குவதும் சிரமமாக உள்ளது. இதனாலேயே இந்த பேருந்தை இயக்க, பெரும்பாலான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தயங்குகின்றனர்.
எனவே, முன்பு தொடர் பேருந்து இயக்கப்பட்டபோது, ஓட்டுநர்களுக்கு சிறப்பு ஊதியம் அளித்து ஊக்குவித்ததுபோல, தாழ்தள பேருந்து ஓட்டுநர்களுக்கு ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.100 சிறப்பு படியாக வழங்க வேண்டும். மேலும், தாழ்தள பேருந்து வழித்தடங்களில் நெரிசல் நேரங்களில் 90-க்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர்.
அப்போது ஒரே நடையில் ரூ.4,500-க்கு மேல் வசூலாகிறது. இதற்கிடையே, பயண அட்டை சரிபார்த்தல், பேருந்துகளை பின்னால் இயக்க உதவுதல், மாற்றுத் திறனாளிகளை ஏற்றி, இறக்க உதவுதல் போன்ற பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். இதனால், அட்டவணை நேரப்படி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் உருவாகிறது. எனவே, நடத்துநர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தாழ்தள பேருந்துகளில் 2 நடத்துநர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.