தமிழகத்தில் விரைவில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி

By KU BUREAU

சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் தொடர்பாக, 7 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சென்னை தரமணியில் செயல்படும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், பல மாணவர்களை உருவாக்குவதில் முன்னணியில் வகிக்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆடை என்பது மிக முக்கியமான அடிப்படை உரிமையாக இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பு, அதன் சார்புடைய கல்வி நிறுவனத்தின் அவசியம் கருதி, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த கல்வி நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

பெண்கள் விடுதி மற்றும் மாணவர்கள் வடிவமைத்த கைவினைப் பொருட்கள், ஆடைகளை பார்வையிட்டார். இதன்பிறகு, செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:

இந்த கல்வி நிறுவனத்தில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறும் மாணவர்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.

தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம் என்பது நமது நாட்டின் பெருமை. ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜவுளித்துறை சார்பில், விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். ஆடை வடி வமைப்பு தொடர்பாக எதிர்கால தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள இவ்வளவு நாட்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சார்ந்திருந்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறி இருக்கிறது.

விஷன் நெக்ஸ்ட் எனும் திட்டம் மூலமாக, இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் தற்போது ஜவுளி தொழிலில் சந்தையின் மதிப்பு 176 பில்லியன் டாலராக உள்ளது. இது, 2030-ம் ஆண்டில் 350 பில்லி
யன் டாலராக அதிகரிக்கும். ஜவுளித்துறை உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது போல, தற்போது 4.6 கோடி பணியாளர்கள் ஜவுளி உற்பத்தி துறையில் பணியாற்றி வருகிறார்கள் இது, 2030-ம் ஆண்டில் 6 கோடியாக இருக்கும்.

எந்த பாகுபாடும் இன்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறோம். விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை நேற்று காலை சந்தித்து பேசினேன். அப்போது அமைச்சர் என்னிடம் தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஜவுளித்துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அமைச்சரின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ஜவுளி துறையில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்தது தொடர்பாக தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘விருதுநகரில் பி.எம். மித்ரா பார்க் திட்டத்தை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தேன். விருதுநகர், கரூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாகை மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஜவுளி தொழில் பிரிவை விரிவாக்கம் செய்வது குறித்தும் வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE