கோவை: மகன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார இதழைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி வார இதழ் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ஓம்கார் பாலாஜி அண்மையில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சியினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
» தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்? - சீமான் கேள்வி
» அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை: பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கருத்து