கும்பகோணம்: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளைக் கேட்க உள்ளோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியது: "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு விரைவில் கூட உள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பெரும்பாலும் திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் ஆட்சியாகவும், பாராட்டும் வகையில் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய கட்சிகளின் வருகை என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியுமே தவிர ஜோதிடம் போல் எந்த கருத்தையும் கூற முடியாது.
பாஜக அரசு முழுக்க இந்துத்துவா கொள்கை கொண்ட அரசு. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை கவனித்துப் பார்த்தால் மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசு என்பது நிரூபனமாகி இருப்பது தெரியும்.
» புதுச்சேரியில் மழையால் பழங்குடியினர் குடியிருப்புகள் பாதிப்பு - அரசு மீது சரமாரி புகார்
சொற்ப காரணங்களுக்காகக் கடைகளை இடிப்பது, வீடு கட்டிடங்களை இடிப்பது இவையெல்லாம் உத்தரப் பிரதேச ஆட்சியில் நடந்துள்ளன. 1820-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்லூரி என்பது அனைவருக்கும் தெரியும். இதனை உச்சநீதிமன்றம் அண்மையில் உறுதி செய்துள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்தம் என்பது வக்ஃபு வாரியம் இருக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம். இது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியாக மத்திய அரசின் ஆட்சி உள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்களையும் குழப்பிவிடும் ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி தான்.
பல்வேறு மாநிலங்களில் சட்டம், ஆளுநர் மூலமாகவும் குழப்பம் செய்து மக்களின் அமைதியை மத்திய பாஜக கெடுக்கின்றனர். சட்டப்பேரவைத் 8 தொகுதி வரை நாங்கள் போட்டியிட்டதால் வரும் தேர்தலில் 6 தொகுதி கேட்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
பேட்டியின் போது அவருடன் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.ஷாஜகான், மாவட்டத் தலைவர் முகம்மது சுல்தான், மாவட்ட இளைஞரணி நிர்வாகி முகமது உசேன், மாவட்டச் செயலாளர் ராஜாஜி ஆகியோர் உடனிருந்தனர்.