புதுச்சேரி: மழையினால் பாதிப்படைந்து மோசான நிலையில் பழங்குடியினர் குடியிருப்புகள் இருந்த சூழலில், அத்துறையின் அரசு செயலர், ஆட்சியர் அதனை இன்று பார்வையிட்டனர். அப்போது மக்கள் குறைகளை தெரிவித்து முறையிட்டனர். குடிநீர் வசதி, பட்டா இல்லை என மக்கள் சராமரியாக புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ள டி.என். பாளையம், கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, இருளன்சந்தை, திருக்காஞ்சி ஆகிய பகுதிகளில் ஆட்சியர் குலோத்துங்கன், அரசு செயலர் முத்தம்மா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வீட்டினுள் நுழையவே முடியாத நிலை இருப்பதும், மழைநீரில் வீடு ஒழுகி இருப்பதையும் அதிகாரிகள் பார்த்தனர்.
அப்போது, அப்பகுதியில் அடிப்படை வசதி இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர். மழை பெய்ததால் அது தண்ணீர் சூழ்ந்துள்ளது. தங்களுக்கு மனைப்பட்டா இல்லை, நிதி உதவி கிடைக்கவில்லை, வீடு கட்ட நிதி உதவி தேவை என கோரினர்.
பின்னர் தீபாவளி இலவச அரிசி வாங்கிவிட்டீர்களா என்று துறைச்செயலர் முத்தம்மா விசாரித்தார். நேற்று தான் வாங்கினோம் என்று எடுத்து வந்து காண்பித்தனர். அரிசி கிடைக்காத போது தமிழகத்தில் ரேஷன் அரிசியை வாங்குவோரிடம் வாங்கி வந்து சமாளிப்பதாக தெரிவித்தனர்.
» குமரி இளைஞர் விஜய்க்கு இத்தாலியின் ‘குல்பா’ விருது
» கட்சி மாற தயாராக உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை சேர்க்க மாட்டோம்: புதுச்சேரி காங்.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டோருக்கு உரிய நிதியுதவி கிடைக்கவில்லை, நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை தரவேண்டும் என்று பழங்குடியினர் அமைப்பின் ராம்குமார் குறிப்பிட்டார்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக செலவழிக்க வேண்டும்,பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த ஏகாம்பரம் கோரினார்.
மது அருந்துவோரால் பாதிப்பு ஏற்படுவதாகவும் மின்சார வசதி, குடிநீர் வசதி இல்லை. பட்டா தந்தால் நல்லது என்று மக்கள் தெரிவித்தனர். இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஏகாம்பரம் கூறுகையில், "பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு, எலிகளை வைத்து போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இலவச மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தருவதாக குறிப்பிட்டு சென்றனர்" என்றார்.