புதுச்சேரி: கட்சி மாற தயாராகவுள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசை போராடி நாம் மாற்ற வேண்டும்.
இந்த ஆட்சியை மாற்ற மக்களும் தயாராக உள்ளனர். ஆளுங்கட்சியில் இருந்து அந்த எம்எல்ஏ வருகிறார், இந்த எம்எல்ஏ வருகிறார், கட்சி மாற தயாராக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் கட்சி மாற தயாராக இருந்தாலும் சரி, நம்மிடம் வர தயாராக இருந்தாலும் சரி, அவர்களை நாம் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை.
ஏனெனில் பணத்தை பார்த்துதான் அவர்கள் கட்சி மாறி ஓடினார்கள். நாளை நம்மிடம் வெற்றி பெற்று விட்டு பணத்தை பார்த்தவுடன் ஓடிவிடுவார்கள். அவர்களை நாம் எப்படி நம்ப முடியும். நாம் ஏழையோ, பாழையோ, நம்மால் முடியுமோ, முடியாதோ, நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கட்டும்.
» சென்னை மின்சார ரயிலில் ரகளை: கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது வழக்கு
» போதைப் பொருள் விற்பனை: முன்னாள் ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் கைது
மக்களவை தேர்தலில் பணம், சாதி என பார்த்து மக்கள் ஓட்டு போட்டு இருந்தால் வேறு ஒருவர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் மக்கள் நல்லவர் யார், நல்லது செய்பவர் யார்? என்று பார்த்து ஓட்டு போட்டார்கள். புதிய வாக்காளர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் வாக்காளர் திருத்தப்பணி வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.
நாம் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று புதிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணி எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால், நாம் வலுவாக இருக்க வேண்டும். இனி வரும் கட்சி கூட்டங்களை நல்லப்படியாக நடத்த வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நம்முடைய ஆட்சி வரும். இவ்வாறு அவர் பேசினார்.