தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன்

மதுரை: தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி, தேனி மாவட்டம் முத்தலாபுரத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டீக்காராமன், செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: ''தெருநாய்கள் மற்றும் நாய் பிரியர்களால் ஏற்படும் அச்சத்தை இந்த சமூகம் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதன்மூலம் காலப்போக்கில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு கடந்த ஆண்டு வகுத்துள்ளது. அந்த விதிகளின்படி, ஒரு குழு அமைத்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக நிறைவேற்றுவதன் மூலம் தெருநாய்கள் தொல்லையில் இருந்து இந்த சமுதாயத்தை விடுவிக்க முடியும். எனவே இந்த வழக்கில் விலங்குகள் நலவாரிய இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். இந்த வழக்கு குறித்து விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE