நாளுக்கு நாள் நலிவடையும் குமரி அரசு ரப்பர் கழகம் மேம்படுத்தப்படுமா?

By KU BUREAU

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிராக ரப்பர் விவசாயம் உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மலை கிராமங்களிலும், குலசேகரம், திற்பரப்பு, திருவட்டாறு உள்ளிட்ட மலையோர பகுதிகளிலும் நிலவும் தட்பவெப்ப நிலை இயற்கை ரப்பர் விவசாயத்துக்கு கைகொடுத்து வருகிறது.

மழைக்காலம் மற்றும் கோடைகாலம் போன்ற பெரும்பாலான நாட்களில் ரப்பர் மரத்தில் பால்வெட்டும் பணி நடைபெறுவதில்லை. ஆண்டுக்கு பாதி நாட்கள் மட்டுமே ரப்பர் மரங்கள் பலன்கொடுக்கும் நிலையில் பராமரிப்பு மற்றும் பால்வெட்டுதலுக்கு அதிக செலவாகும். கடந்த ஆண்டு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற ரப்பர் பால், தற்போது ரூ.170 வரை விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் அதிக அளவிலான இயற்கை ரப்பர் உற்பத்தியாகும் பகுதியாக குமரி மாவட்டம் இருந்த போதும் ரப்பர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நெடுநாள் கோரிக்யைான ரப்பர் பூங்கா இதுவரை குமரி மாவட்டத்தில் தொடங்கப்படவில்லை என்பது குறையாக உள்ளது.

ரப்பர் மரங்களில் பால்வெட்ட முடியாத மழைக் காலங்கள் மற்றும் இயற்கை சீற்றம் நிறைந்த காலங்களில் வருவாயின்றி பாதிக்கப்படும் ரப்பர் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கூலி உயர்த்தப்படவில்லை: நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தின் கீழ் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்கவேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படாததால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

அதிகாலையில் ரப்பர் பால்வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கவேண்டும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு காயமடையும் மற்றும் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்குவதுடன் மட்டுமின்றி அவர்களது வாழ்வாதாரத்துக்காக பாதிக்கப்பட்ட தொழிலாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அரசு ரப்பர் தோட்டத்தின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை தடுத்து பாதுகாக்க வேண்டும் ஆகியவை தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்து வரும் அரசு ரப்பர் கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் பலன் அடைகின்றனர். காமராஜர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 4,785 ஹெக்டேரில் அரசு ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. பின்னர் 1984-ம் ஆண்டு இது அரசு ரப்பர் கழகமாக மாறியது. அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள ரப்பர் காடுகள் படிப்படியாக குறைந்து வருவதை தடுத்து ரப்பர் கழகத்தை மீட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE