பசியால் வீட்டுக்குள் புகுந்த வடமாநில நபர்: திருடன் என நினைத்து கம்பத்தில் கட்டிவைத்த பொதுமக்கள்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் பசியால் வீட்டுக்குள் புகுந்த வட மாநில நபர் ஒருவரை திருடன் என நினைத்து பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் இன்று காலை கட்டிவைத்தனர்.

விருதுநகர் பர்மா காலனியில் பராரியாகத் திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் யார் எனக் கேட்டு விசாரித்துள்ளனர். இதனால் பயந்த அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை துரத்திச்சென்றனர். பர்மா காலனியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து சாப்பிட உணவு கேட்டுள்ளார். வீட்டிலிருந்த பெண்கள் பயந்து கூச்சலிட்டுள்ளனர்.

அதையடுத்து, துரத்திவந்த பொதுமக்கள் வீட்டுக்குள் புகுந்த நபரைப் பிடித்து வெளியே இழுத்துவந்து மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். பின்னர் இதுகுறித்து கவுன்சிலர் சுல்தானா அகமது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து விசாரித்தபோது, அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் மண்டல் (60) என்பது தெரியவந்தது. மேலும், பராரியாக சுற்றித்திருந்த இவர் கடந்த 8 நாள்களாக உணவருந்த வில்லை என்றும், உணவு கேட்டு வீட்டுக்குள் புகுந்ததாகவும் கூறினார்.

அதையடுத்து, அவருக்கு போலீஸார் உணவு வாங்கிக் கொடுத்து சாப்பிடச் செய்தனர். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், அசோக் மண்டல் குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE