சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடிக்கடி தாமதமாகும் ரயில்கள்!

By மு.வேல்சங்கர்

சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை வழித்தடம் இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினசரி 120-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தினசரி 40 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வழித்தடத்தில் சீராக மின்சார ரயில்கள் இயங்குவதில்லை. தினசரி 40 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. விரைவு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில் பேசின்பாலம், திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர்,பொன்னேரி ஆகிய இடங்களில் திடீரென நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால், நாள்தோறும் வேலைக்கு செல்வோர் விரைவு ரயில்களை பிடிக்க சென்னை சென்ட்ரலுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். இந்த வழித்தடத்தில் கடைசி ரயில் இரவு 11:20 மணிக்கே நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே, நள்ளிரவு 12:15 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்பட்டது.

தற்போது 55 நிமிடங்கள் முன்னதாக நிறுத்தப்படுவதால் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு முதல் ரயிலை பிடித்து வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே பழைய படி நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்பட்ட கடைசி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

இந்த மார்க்கத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு, 3 ரயில் பாதைகள் தான் உள்ளன. 4-வது பாதையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது தவிர சரக்கு ரயில் பழுது, தண்டவாள விரிசல், சிக்னல் கோளாறு போன்ற பிரச்சினைகளாலும் அவ்வப்போது, மின்சார ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் சீராக ரயில் சேவை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், ரயில்களை தாமதமின்றி இன்றி இயக்கவும், கூடுதல் ரயில் சேவை அளிக்கவும் கூடுதல் ரயில் பாதை தேவைப்படுகிறது. தற்போது, அத்திப்பட்டு வரையில் உள்ள 4 வழிப்பாதைகளை, கும்மிடிப்பூண்டி வரையில் நீட்டிக்க இருக்கிறோம். இந்த திட்டப் பணிகளை படிப்படியாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE