விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில் பாமக எம்எல்ஏ-வுக்கு மூத்த அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது.
விழுப்புரத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று விழுப்புரத்தில் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் பொன்முடி, எம்எல்-ஏக்கள் லட்சுமணன், மஸ்தான், அன்னியூர் சிவா, மணிகண்ணன், பாமக எம்எல்ஏ சிவகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் சொர்ண லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் 2620 பயனாளிகளுக்கு ரூ 18.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய பாமக எம்எல்ஏ சிவகுமார், தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை பாராட்டி பேசி முடித்தார். அவரை தன் அருகே வரவழைத்து தம்ஸ் அப் செய்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார் பொன்முடி. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில் பாமக எம்எல்ஏ-வுக்கு மூத்த அமைச்சர் பொன்முடி பாராட்டு தெரிவித்தது பேசுபொருளாகியுள்ளது.