இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

By KU BUREAU

இன்று தமிழகம் முழுவதும் உள்ள 69,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், வாக்குச்சாவடி மாறுதல், விலாசம் மாற்றுதல் போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். குறிப்பாக புதிய வாக்காளர் சேர்க்க படிவம் 6, வெளி்நாட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றுரைக்க 6 பி, வாக்காளர்பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கெனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE