அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி 3-வது நபர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘அமைச்சர் செந்தில் பாலாஜி்யை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தபோது உரிய வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. எனவே, செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதேபோல, இந்த வழக்கை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரி இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘எந்த அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?’’ என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் தரப்பி்ல், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, அவருக்கு அநீதி இழைக்கப்பட் டுள்ளது என்பதால் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்குக்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர், விசாரணைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE