சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (33). கடந்த 13-ம் தேதி இரவு வயிற்று வலி காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 9.18 மணியளவில் உயிரிழந்தார்.
விக்னேஷ் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும்தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். பின்னர், அவரது உடலை பெற மறுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விக்னேஷின் சகோதரர் பார்த்திபன் கூறும்போது, “இரண்டு நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கு சிகிச்சை பார்க்க இயலாத காரணத்தினால், அரசு மருத்துவமனைக்கு வந்தோம். தனியார் மருத்துவமனை சென்றபின், அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது.
» சென்னை | எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் ஓட்டம்
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ நவ.16, 2024
அங்கிருந்து, இந்த மருத்துவமனையில் அனுமதித்தோம். இங்கே வந்ததில் இருந்து முறையான சிகிச்சையை அவருக்கு மருத்துவர்கள் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் நள்ளிவில் திடீரென அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் முறையான சிகிச்சை கிடைக்கவில்லை. மருத்துவர்கள் இருந்திருந்தால், விக்னேஷை காப்பாற்றி இருக்கலாம்” என்றார்.
விக்னேஷின் மனைவி பரிமளம் கூறும்போது, “மருத்துவமனைக்கு வரும்போது, விக்னேஷ் நன்றாக நடந்து வந்தார். நேற்று இரவு கூட என்னிடம் செல்போனில் போனில் நன்றாக பேசினார். திடீரென அவர் இறந்துவிட்டதாக காலையில் சொல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றோம். ஆனால், எங்களை அனுப்பவில்லை” என்றார்.
மருத்துவமனை இயக்குநர் அறிக்கை: இதுகுறித்து, மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விக்னேஷ் மருத்துவமனையில் உள்நோயாளியாக 13-ம் தேதி இரவு 11:25 மணியளவில் கடுமையான வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்பு, தனியார் மருத்துவமனையில், கணையம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று அங்கு பணம் செலுத்த முடியாமல், இங்கு வந்தார்.
அவரது கடுமையான குடிபழக்கத்தால் கணையம் பாதிக்கப்பட்டு, 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தைராய்டு சுரப்பி நோயும் இருந்தது. அவரது உடல்நிலை குறித்து, விக்னேஷின் தந்தை, மனைவி, சகோதரர், சகோதரி ஆகியோரிடம் தெளிவாக மருத்துவர்கள் விளக்கி ஒப்புதல் பெற்றுள்ளனர்.
பின்னர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வாய்வழியாக செயற்கை குழாய் பொருத்துவதற்கு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இன்று காலை 9.18 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், நேற்று பிற்பகலில் விக்னேஷின் உடலை, அவரது உறவினர்கள் பெற்று கொண்டனர்.