கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது? - ஐகோர்ட் கேள்வி

By KU BUREAU

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.23 அன்று ஓம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் முதல்வரான பழனிசாமி, வி.கே.சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்தது. பழனிசாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தீபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் பழனிசாமி, சசிகலாவை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், இந்த வழக்கில் மேல்விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE