அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் சிப்காட் தொழிற்பேட்டையில் நேற்று டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடி மதிப்பிலான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா, அரியலூர் மாவட்டம் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ரூ.22 கோடி மதிப்பில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2-ம் கட்ட தொடக்க விழா, கொல்லாபுரம் கிராமத்தில், பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா, ரூ.173.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் பேசியதாவது: தமிழக மக்கள் என் மீதும், திமுக ஆட்சி மீதும் வைத்திருக்கும் அன்பும், நம்பிக்கையும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தினந்தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, ரூ.3 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக பேசுகிறார். அந்த மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்தது, அதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை புள்ளிவிவரத்துடன் சொல்ல முடியுமா? ஆனால், திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், சி.வி.கணேசன், டிஆர்பி.ராஜா, கீதாஜீவன், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆ.ராசா, அருண் நேரு, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக துறை செயலர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர்கள் பொ.ரத்தினசாமி (அரியலூர்), கிரேஸ் பச்சாவ் (பெரம்பலூர்) மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.