கோவையில் ஐயப்ப பக்தர்களுக்காக மாலை, வேட்டி விற்பனை தீவிரம்

By டி.ஜி.ரகுபதி

கோவை: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ம் தேதி ஐயப்ப பக்தர்கள் அதிகளவில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அதன்படி, கார்த்திகை முதல் தேதி நாளை (நவ.16) வருகிறது.

இதையொட்டி, மாலை அணியும் பக்தர்களுக்காக வேட்டிகள், துண்டுகள், மாலைகள், ஐயப்பன் உருவப்படம் பதித்த டாலர்கள் ஆகியவற்றின் விற்பனை கோவையில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. நியூ சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே உள்ள விற்பனைக் கடையில் இன்று (நவ.15) மாலை, வேட்டிகள் வாங்குவதற்காக அதிகளவில் பக்தர்கள் வந்து சென்றனர். அதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளிலும் வேட்டி, துண்டு, மாலை விற்பனை இன்று தீவிரமாக இருந்தது.

இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறும்போது, “108 எண்ணிக்கையில் பெரிய மாலைகள், 54 எண்ணிக்கையில் ஒரு துணை மாலை ஆகியவற்றை பக்தர்கள் அணிவது வழக்கம். இவற்றில் சந்தன மாலை, துளசி மாலை, ஈச்சர மணி மாலை உள்ளிட்ட வகைகள் உள்ளன. பெரிய மாலைகள் ரூ.120, ரூ.160, ரூ.200, ரூ.220 என்ற விலைகளிலும், சிறிய மாலைகள் ரூ.80, ரூ.100, ரூ.120, ரூ.140 விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல், கருப்பு, நீலம் மற்றும் காவி வண்ணங்களில் வேட்டி ரூ.180 முதலும், மேற்கண்ட வண்ணங்களில் துண்டுகள் ரூ.80 முதலும் விற்பனை செய்யப்பட்டன. ஐயப்பன், விநாயகர் உருவம் பதித்த டாலர்கள் ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டன. நாளை மாலை அணிய உள்ள பக்தர்கள், இன்று அதிகளவில் வந்து மாலை, வேட்டிகளை வாங்கிச் சென்றனர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE