நாகர்கோவில்: மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஆட்டோவை இழுத்து மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்திலிருந்து களியக்காவிளை வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகள் பெயர்ந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள் உள்ளன.
குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை பல இடங்களில் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. படுகுழிகளுடன் காணப்படும் இந்த சாலையில் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து இருக்கும் இப்பகுதியில் சாலையை சீரமைக்க கேட்டு பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
» கப்பலில் கடத்தப்பட்ட 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - குஜராத் கடற்பகுதியில் 8 பேர் கைது
இந்நிலையில் இன்று மதியம் திடீரென அங்கு வந்த வாகன ஓட்டிகள் அச்சாலையில் படுகுழியில் தேங்கிய மழைநீரில் ஆட்டோவை ரப்பர் படகுமூலம் இழுத்து கரையேற்றுவது போன்று பொதுமக்களுடன் சேர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.