புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொருவராக சென்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர். இதில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் அளித்த மனுவில், "விவசாயிகள், பயிர் அடங்கல் சான்றிதழ் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. விஏஓ, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என மனு அளித்தும் சான்றிதழ் கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்படுகிறோம். விவசாயிகளுக்கு எளிய முறையில் பயிர் அடங்கள் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை தடையின்றி நடத்திட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி அளித்த மனுவில், ”சென்டாக்கில் மருத்துவ படிப்புக்கான என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் முதல் மற்றும் 2ம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் பல மாணவர்கள் போலி என்ஆர்ஐ சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர் தலைமையில் சான்றிதழ்களை ஆய்வு செய்து முறைகேடு செய்த மாணவர் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் இடைத்தரகர்களையும் கைது செய்ய வேண்டும். பெற்றோர் மாணவர் சங்க தலைவர் பாலா, உயர்க்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு வருவாய்த்துறையில் போலி ஆவணங்களுக்கு தகுதியில்லாத மாணவர்களுக்கு சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் வழங்கப் படுகிறது. இதனால் மண்ணின் மைந்தர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
» திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புப் பகுதியில் குடியிருந்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கக் கோரி சாலை மறியல்
இதனிடையே, புதுச்சேரி இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பட்டியல் இன இயக்க தலைவர் வீரமணி, செயலாளர் நித்தியானந்தம் ஆகியோர் தலைமையிலானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அச்சமயம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தாய் வழியில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது ஏன்? என்று கூறியும், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் மக்களை சந்தித்து ஆட்சியர் மனுக்களை பெற வேண்டும் என்று கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதேபோல் மற்ற பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்களும் கருத்தரங்க கூடத்துக்கு வந்து ஆட்சியர் மனுக்களை பெற வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இதையடுத்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து, ஒவ்வொருவராக அழைத்து ஆட்சியர் புகார் மனுக்களை பெற்றார்.