விருதுநகர் : பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று 4 இடங்களில் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதிய படைப்புகள் தொடர்பான அறிவியல் கண்காட்சி இன்று நடத்தப்பட்டது. விருதுநகர், சாத்தூர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். ஆங்கிலப் பள்ளியிலும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு ராஜபாளையம் சின்மையா வித்யாலயா பள்ளியிலும், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அரசு பள்ளி, அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். 6-8 வகுப்பு, 9-10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1- பிளஸ்-2 மாணவர்கள் என 3 பிரிவாக கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில், சொட்டூநீர் பாசன முறை, செயற்கைக்கோள் மாதிரி, தொலைத்தொடர்பு செயல்முறை, நீர் சுழற்சி, மழைநீர் சேகரிப்பு, சோலார் மூலம் மின்சாரம் பெறுதல், நில நடுக்கத்தை முன்கூட்டியே அறியும் கருவி, நீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி முறைகள், பென்சிலில் மின்சாரம் தயாரித்தல், காற்றாலை இயந்திரம் செயல்படும் விதம், தேசிய பறவை, விலங்கு, மரம் மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம் மன்றங்கள் சார்பில் துறை சார்ந்த மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அழைத்துவரப்பட்டு அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அறிவியில் மாதிரிகள் குறித்து பார்வையாளர்களுக்கு மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE