தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் மருத்துவரை தாக்குவதா? - ஹெச்.ராஜா கண்டனம்

By துரை விஜயராஜ்

சென்னை: மருத்துவர் பாலாஜி மீது திமுகவினர் குற்றம் சாட்ட முயற்சிக்கிறார்கள் என்றும், தாய்க்கு சரியான சகிச்சை இல்லை என்பதால் மருத்துவரை அவரது மகன் தாக்குவது நியாயமாகுமா என்றும் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா கூறியதாவது: "சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் மகனால், மருத்துவர் பாலாஜி கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. இதுதான் தமிழக அரசு செயல்படும் லட்சனம்.

தமிழகத்தில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசின் நிர்வாகத்தில் முன்னேற்றம் காணப்படும் என நான் நினைத்தேன். ஆனால், துணை முதல்வர் பதவியால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது. அரசு நிர்வாகம் மேலும் சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். திருவாரூரில் திமுக பிரமுகரால் மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்.

பரோட்டா கடையில் சாப்பிட்டாலும் திமுகவினர் பணம் கொடுப்பதில்லை. மாறாக, கடைக்காரரை தாக்குகிறார்கள். அதேபோல், மகளிர் அழகு நிலையம் சென்றாலும் அங்கும் திமுகவினருக்கு இதே வேலையாக தான் இருக்கிறது. எந்த நோய்க்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவருக்கு தெரியும். ஆனால், மருத்துவமனையில், அந்த நோயாளிக்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற புதிய பிம்பத்தை திமுகவும், சில ஊடகமும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

துணை முதல்வர் பதவி எதற்கு விளையாடுவதற்காகவா?, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. அறிவாலயத்தின் ஊடகங்கள் மருத்துவர் மீது தான் குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். வீட்டில் இருந்து கத்தியுடன் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தாக்கிய நபருக்கு ஆதரவாக இருக்கக்கூடாது. தாய்க்கு சரியான மருத்துவம் கிடைக்கவில்லை என்பதால், கத்தியால் வெட்டுவாரா? அதை நியாயப் படுத்த முடியாது" என்று ஹெச்.ராஜா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE