புதுச்சேரி: குமரகுருபள்ளத்தில் புதிய டெக்னாலஜி அடிப்படையில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் விஞ்ஞான ரீதியில் ஊழல் நடந்துள்ளது. இது சம்மந்தமாக துணை நிலை ஆளுநர், முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் 2017ம் ஆண்டு சுமார் ரூ.1,800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது. 2017ல் இருந்து 2021 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் புதுச்சேரி மாநிலத்துக்கு துரோகத்தை இழைத்தன. 2021ல் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அவசர கதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிவு செய்யப்பட்டன.
இதுவரை சுமார் ரூ.700 கோடிக்கு மட்டுமே பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்ட பணிகளிலும் சம்பந்தபட்ட அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளுடன் திட்டங்களை தொடங்கி வைத்ததாக தெரிகிறது. ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாழைக்குளம் பகுதியில் சுமார் 370 சதுர அடி அளவில் 220 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி செலவில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. அதே போன்று குமரகுருபள்ளத்தில் சுமார் 400 சதுர அடி அளவில் 216 பயனாளிகளுக்கு ரூ.45.50 கோடியில் பொதுப்பணித்துறை மூலமாக ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது.
வாழைக்குளம் பகுதியில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.9 லட்சத்து 9 ஆயிரம் செலவில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. ஆனால் குமரகுரு பள்ளத்தில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.21 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. குமரகுருபள்ளத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு புதிய டெக்னாலஜி அடிப்படையில் கட்டுவதற்கு தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெண்டருக்கு மேல் 7 சதவீதம் அதிகப்படுத்தி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
» நெம்மேலியில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
» கத்திக் குத்து எதிரொலி: சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்
புதிய டெக்னாலஜி என்ற பெயரில் மக்களுடைய வரிப் பணத்தை முறைகேடாக அதிக அளவில் டெண்டர் விட்டுள்ளனர். இது ஒரு விஞ்ஞான ரீதியிலான ஊழலாகும். புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்ட பொதுப்பணித் துறையில் பி.எஸ்.ஆர் ரேட் என்னவென்றே முடிவு செய்யப்படவில்லை.
சுமார் ரூ.20 கோடி அளவில் 216 குடியிருப்பு வாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட வேண்டிய சூழ்நிலையில் ரூ.45.50 கோடி செலவில் அந்த கட்டுமானப் பணியை செய்வதற்கு புதுச்சேரி அமைச்சரவை அனுமதி அளித்ததா? அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கூட்டு சதி செய்து இந்த முறைகேட்டின் மீது ஊழல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அடுக்குமாடி வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.4000 செலவாகியுள்ளது.
எனவே, ஸ்மார்ட் சிட்டி நிதியில் குறிப்பிட்ட இந்த பணியில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக துணை நிலை ஆளுநர், முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்" என்று அன்பழகன் கூறியுள்ளார்.