சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் செயல்திட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் விடப்படுவதாக கடந்த ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், நீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், ``மாடம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் 5 இடங்களில் ஏரியில் கலக்கிறது. இந்த கழிவுநீர் தொழிற்சாலை கழிவுநீர் இல்லை. டிடிஎஸ் அளவு, ஒரு லிட்டரில் 2 ஆயிரம் மி.கி. வரை (அனுமதிக்கப்பட்ட அளவு 500 மி.கி.) உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்: அதனைத் தொடர்ந்து இந்த ஏரியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பரிந்துரையில், ``ஏரியின் கரையை பலப்படுத்த வேண்டும். மனித நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும். மாடம்பாக்கம் பேரூராட்சியில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சி பகுதியிலிருந்து ஏரிக்கு வரும் கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மிதக்கும் கழிவுகளைத் தடுக்கும் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
» பிரதமர் மோடிக்கு டோமினிகோ அரசின் உயரிய விருது
» அமெரிக்க உளவுத் துறை தலைவராக துளசி கபார்ட் நியமனம் - யார் இவர்?
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் விஜய் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் விடுவது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆணையர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய பரிந்துரைகளின்படி, எடுக்க உள்ள நடவடிக்கை குறித்த செயல்திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை அன்று செயல்திட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், மாநகராட்சி ஆணையருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்க நேரிடும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிச.20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது